திருக்குறளில் தெய்வம்
Abstract
திருக்குறளில் எந்தவொரு கடவுட் கோட்பாட்டையும் வள்ளுவர் பின்பற்றவில்லை. எனவேதான் ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்தவரும் அவரைத் தங்கள் சமயத்தவர் என்று உரிமை கோருகிறார்கள். வள்ளுவர் கடவுள் எனும் கருத்து முதல்வாதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. என்பது தெரிகிறது. கடவுள் வாழ்த்து அவர் எழுதியதாகவே கொண்டாலும் அதை விடப் பொருளியல் வாழ்வுக்குத்தான் அவர் முதன்மை அளித்திருக்கிறார். தமிழில் கடவுள், இறைவன், தெய்வம் ஆகிய சொற்கள் ஒரு பொருட் பன்மொழிச் சொற்கள். கடவுள் மற்றும் இறைவன் ஆகிய சொற்கள் உயர்திணைச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தமிழ்ச் சொற்கள். தெய்வம் எனும் சொல் அஃறிணைச் சொல்லாகப் பயன்பாட்டில் இருக்கிறது. இச்சொல் வடமொழிச் சொல். ‘தேவ்’ எனும் சொல்லிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட சொல். திருக்குறளில் கடவுள் எனும் சொல் எங்கும் சுட்டப்படவேயில்லை. பல்வேறு சமயங்கள் கூறும் கடவுள் பற்றிய கருத்துகளைத் தன்னுடைய குறள்களில் சுட்டிக் காட்டும் வள்ளுவர் ‘கடவுள்’ எனும் சொல்லை மட்டும் தன்னுணர்வுடனே தவிர்த்துள்ளார். இறைவன் எனும் சொல்லை நான்கு இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அதில் ஓரிடத்தில் அரசன் எனும் பொருளில் அச்சொல் பயிலப்பட்டுள்ளது. இறைவன் என்பதன் வேர்ச்சொல்லான இறை என்னும் சொல் ஆறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஓரிடத்தில் மட்டுமே இறைவன் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அரசன், தலைவன், இறைத்தல், முன்கை போன்ற பொருட்களில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. தெய்வம் எனும் சொல் ஆறு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லைப் பேராற்றல் மிக்க கடவுட் தன்மை பொருந்திய சொல்லாக அவர் எங்கும் பயன்படுத்தவில்லை. இச்சொல் ஆளப்பட்டுள்ள குறள்களை ஆராய்ந்தால், அறவழியில் நிற்கும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர முடியும் எனும் மனித மையக் கோட்பாடே தென்படுகிறது. ‘தெய்வத்தால் ஆகாத வினையும் உண்டு; அதையும் சாதிக்கக் கூடிய ஆற்றல் மனித உழைப்புக்கு உண்டு’ என்பதே அவருடைய ஆதாரக் கருத்தியலாக இருக்கிறது.
சமண, பவுத்தம், உலகாயதம், பூதவாதம், சாங்கியம், சார்வாகம், ஆசீவகம் போன்ற சமயங்களும் எல்லாம் வல்லதான இறை எனும் நம்பிக்கையை ஏற்றவையல்ல. சமணமும் பவுத்தமும் பின்னாளில் இறைக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டாலும் தொடக்கத்தில் அவை இறை மறுப்புச் சிந்தனைகளாகவே இருந்தன. இச்சிந்தனைகள் மேலோங்கிய காலகட்டத்தில் வாழ்ந்த வள்ளுவரிடமும் இறைமறுப்பு வாதம் தென்படுகிறது. தெய்வத்தை விட அறவழியில் வாழும் மனிதனை அவர் உயர்வாக மதித்துள்ளார். இருத்தலியவாதியான நீட்சே கடவுளை விட ஆற்றல் மிக்கவனாக ‘அதி மனிதன்’ எனும் கருத்துருவைத் தந்தார். அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் கடவுளை விட ஆற்றல் மிக்கவனாக ‘அற மனிதன்’ எனும் கருத்துருவைத் தன் குறட்பாக்களில் உணர்த்துகிறார். அத்தகைய பேராற்றல் மிக்க அறமனிதனுக்கு முன்னால் பலம் குறைந்த கடவுளைக் குறிப்பதற்கு தெய்வம் எனும் வடமொழிச் சொல்லையே வள்ளுவர் பயன்படுத்துகிறார். இது குறித்த ஆழமான ஆய்வாக இந்தத்தாள் அமைகிறது.
PDF Downloads: 0 times
Copyright (c) 2026 கணேஷ் சுப்ரமணி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

